கொரானோ தடுப்பூசி அனுப்புவதை மத்திய அரசு நிறுத்திவிட்டதால், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரானோ தடுப்பூசி இருப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரானோ நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அது சரியாக பின்பற்றப்படுகிறதா என கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் ஆய்வு நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், “தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு நிறுத்திவிட்டதால் மாநில அரசுகளுக்கு அனுப்புவதையும் நிறுத்திவிட்டது. இதனால் கொரானோ தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி என்பது தமிழக அரசு மருத்துவமனையில் இருப்பு இல்லை. தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனையில் அதனை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் நோய் எதிர்ப்பு ஆற்றல் 90 சதவிகிதம் உள்ளதால், இதுவரை பெரிய பாதிப்பு இல்லை. அதே சமயத்தில் தேவையான அளவிற்கு கொரானோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. கொரானோ பாதிப்பு அதிகரித்தாலும் ஊரடங்கு என்பது தற்போது இல்லை” என்று தெரிவித்தார்.
– அனகா காளமேகன்







