முதுமலை புலிகள் காப்பகத்தில் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் 50வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அறிவித்திருந்தார்.
மேலும் ஆஸ்கார் விருது பெற்ற தம்பதி பொம்மன் மற்றும் பெள்ளியை சந்திப்பார் என்றும் தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்த வருகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தெப்பக்காட்டில் இருந்து மாயாறு தரைப்பாலம் வழியாக யானைகள் செல்லும் சாலையை சரி செய்தும், மலைக் கிராமங்களுக்கு செல்வதற்காக நடைபாதைகள் அமைத்தும், தரைப்பாலங்களை விரிவுபடுத்தியும் வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
– கோ. சிவசங்கரன்








