கொரோனா தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு ஏற்படும் என எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் நடந்த இன்றைய கூட்டத்தொடரின் போது மக்களவையில் உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங், கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் திடீரென மாரடைப்பு ஏற்படக்கூடிய நிகழ்வு அதிகரித்துள்ளதா? இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் அதிக அளவு மாரடைப்பு ஏற்படுவது குறித்து எந்த ஒரு தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை.
அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு பின்னர் மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கான எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு ஆய்வுகளையும் ஐசிஎம்ஆர் மேற்கொள்ளவில்லை எனவும் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.







