எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 5வது நாளாக இன்று முடங்கியது.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தின் வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து விமா்சித்ததற்கு மன்னிப்பு கோர வலியுறுத்திய பாஜக உறுப்பினா்களின் போராட்டம் மற்றும் அதானி குழுமத்தின் மீதான மோசடி புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய எதிா்க்கட்சி உறுப்பினா்களின் போராட்டம் ஆகியவை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து 5-ஆவது நாளாக இன்றும் முடங்கியுள்ளது.
இதையும் படிக்க: இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கூட்டம் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. அப்போதில் இருந்து தனது கருத்துக்காக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், பிரதமா் நரேந்திர மோடியே வெளிநாடுகளில் இந்தியா குறித்து விமா்சனங்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வாய்ப்பே இல்லை எனக் கூறியுள்ளது.
-ம.பவித்ரா







