அசாமின் நாகோன் மக்களவைத் தொகுதியிலும், மேற்குவங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்றுவருகிறது. அதன் முன்னிலை நிலவரங்களை காண்போம்:
அசாம்: நாகோன் தொகுதியில் பாஜக முன்னிலை
அசாம் மாநிலம் நகோன் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசை சேர்ந்த பிரத்யுத் போர்டோலாய் நடப்பாண்டின் தொடக்கத்தில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், காலியாக இருந்த நாகோன் மக்களவை மக்களவைத் தொகுதியில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 9) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அசாம் மாநிலம் நாகோன் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேவாசிஷ் சர்மா. இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். காலை 11 மணி நிலவரப்படி, பாஜக வேட்பாளர் தேவாசிஷ் சர்மா 1.1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம், 57,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் உள்ளார்.
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் பத்ருதீன் அஜ்மல் 52,000 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சிபாமோனி போரா 16,000 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேற்கு வங்கம்: நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை
மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியிலும், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ரெஜிநகர் தொகுதியிலும் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றிருந்த இரண்டு தொகுதிகளில், அவர் ராஜினாமா செய்த நந்திகிராம் தொகுதியில் அவரது முன்னாள் உதவியாளர் சந்திரநாத் ரத்தின் தாயார் ஹாசி ராணி ரத், பாஜக சார்பில் போட்டியிட்டார். சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு, சந்திரநாத் ரத் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரது தாயாருக்கு பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. இதற்கிடையே, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியதால், காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.
நந்திகிராம் தொகுதி முன்னிலை நிலவரம்:
இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் ஹாசி ராணி ரத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். காலை 11 மணி நிலவரப்படி, அவர் 24,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம், 19,600 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் 4,300 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ரெஜிநகர் தொகுதி முன்னிலை நிலவரம்:
முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ரெஜிநகர் தொகுதியிலும் பாஜக வேட்பாளர் சங்கராவ் சர்க்கார் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.




