இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இதில் அசாமின் ஒரு நாடாளுமன்ற தொகுதியும், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் 5 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இத்தேர்தலில் களம் காணும் நாம் தமிழர் கட்சி, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்காணும் வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- மதுராந்தகம் – கோ.ஜானகிராமன் B.E.,M.B.A.
- தாராபுரம் – மு.கார்த்திகா B.E. இளங்கலை பொறியியல்
- தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) – ச.கார்த்திக் குமாரி அழகுக்கலை வல்லுநர்
சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




