சர்தார் 2, மண்டாடி படங்கள் எப்படி இருக்கு?

சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு படங்களும் தற்போது திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த வாரம் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா நடித்த சர்தார் 2, சூரி நடித்த மண்டாடி படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ.

சர்தார் 2:

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வந்த சர்தார் படத்தின் அடுத்த பாகம். ஆனால், இந்த கதையில் சர்தார் படத்தின் முந்தைய கதை, பிந்தைய கதை என இரண்டையும் சேர்த்து சொல்லியிருக்கிறார்கள். பேராபத்தை விளைவிக்கும் ஒரு ஜப்பானிய மிஷினை அழிக்கும் மிஷனே இந்த பாகம். 1980 அந்த மிஷினின் ஆபத்தை சர்தார் கார்த்தியும், அதிகாரியாக இருக்கும் மாளவிகாமோகனும் கட்டுப்படுத்தி வைக்கிறார்கள். இப்போது வில்லன் எஸ்.ஜே.சூர்யா அதற்கு உயிர் கொடுத்து, மக்களை அழிக்க நினைக்கிறார். அதை சர்தார் கார்த்தியும், இப்போது உளவுத்துறை பணியாற்றும் அவர் மகன் கார்த்தியும் இணைந்து எப்படி தடுக்கிறார்கள் என்ற ரீதியில் கதை செல்கிறது.

3 கத்திகள், அதற்குள் இருக்கும் ரகசியம், பயோ வெப்பன், அதனால் ஏற்படும் அழிவுகள், அதற்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் என முதற்பாகம் செல்கிறது. ஆஷிகா, யோகிபாபு, நாசர் ஆகியோருடன் இணைந்து அந்த கத்தி, அந்த ஜப்பானிய மிஷின் பின்னால் இருக்கும் உண்மையை கண்டுபிடிக்கிறார் கார்த்தி. அதை கைப்பற்றி மக்களை அழிக்க நினைக்கிறார் கொடூர வில்லனான எஸ்.ஜே .சூர்யா. அப்போது சர்தார் கார்த்தி தனது ஜப்பானிய ஆபரேஷன், தான் செய்த செயல்களை சொல்கிறார். கடைசியில் மைசூர் தசாரா பின்னணியில் அந்த கொடூர திட்டத்தை எஸ்.ஜே.சூர்யா செயல்படுத்த நினைக்க என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். மகன் கார்த்தி, அப்பா கார்த்தி என இரண்டு பேரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். இரண்டுபேரும் சண்டைகாட்சியில், பாசக்காட்சியில் கலக்கியிருக்கிறார்கள். மகன் கேரக்டரில் உற்சாகம், அப்பா கேரக்டரில் அழுத்தம்.

வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு, அவர் கேரக்டர் பின்னணி ஓகே என்றாலும், அவர் ஓவராக பேசுகிறார், பேசிக்கொண்டே இருக்கிறார். அது படத்தை பலவீனமாக்குகிறது. உளவாளி கதை என்பதால் விறுவிறுப்பான சீன்கள் அதிகம். சென்னை, கர்நாடக பார்டர், ஜப்பான், மைசூர் என பல இடங்களில் கதை நடக்கிறது. அந்த மிஷின், அதன் பின்னணியில் இருக்கும் கொடூரம், பாதிப்பு பற்றி தகவல்கள், பிளாஷ்பேக் காட்சிகள் உருக்கம். ஆனாலும், முதற்பாதியை விட இரண்டாம் பாதி இழுக்கிறது. ஆன்டிபயாடிக் மருந்துகள் வேண்டாம் என்பதை சொல்லும் அழுத்தமான கரு. நம் உடல் அப்படிப்பட்ட மருந்துகளால் எப்படி பாதிக்கப்படும், வருங்காலத்தில் என்ன பிரச்னை என சொல்ல விதம் ஓகே.

ஆனால், அதை நீளமான படமாக, ஆக் ஷன் தவிர கமர்ஷியல்களை குறைத்து எடுத்தது போராடிக்கிறது. ஜப்பான் சண்டை, ரயில் சண்டை, மைசூர் கிளைமாக்ஸ், அந்த மிஷின் சம்பந்தப்பட்ட ரகசியம் புதுசு, அதை ரசிக்கவும் முடிகிறது. படத்தின் பட்ஜெட் பெரியது, நடிகர்கள் நிறைய. ஆனால் பல இடங்களில் நிறைவு இல்லை. மாளவிகாமோகனன் நடிப்பு ஓகே. ஆஷிகா, ரஜிஷா விஜயன், சின்னிஜெயந்த், யோகிபாபுவை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். படத்துக்கு சாம் சி.எஸ்.பின்னணி இசை பலம். ஜார்ஜ் ஒளிப்பதிவில் பரபரப்பு. ஆனாலும், அதிகமான வசனங்கள், நீளமான சீ்ன்கள், பாடல், காமெடி போன்ற விஷயங்கள் இல்லாதது குறை.

மண்டாடி :

ராமநாதபுரம் மாவட்டம் கடல் பகுதிகளில் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டிகள் நடக்கின்றன. அந்த போட்டிகளில் சத்யராஜ் சிஷ்யர்களான சூரியும், சுகாசும் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பணம், துரோகம், அதிகாரம் காரணமாக நண்பர்கள் பிரிகிறார்கள். 20 ஆண்டுகள் ஊரை விட்டு வெளியேறி சென்னையில் வசிக்கிறார் சூரி. அந்தகாலத்தில் ஊரில் பெரிய தொழிலதிபர், தாதாவாக மாறுகிறார் சுகாஸ். மீண்டும் ஊருக்கு சூரி வருவது ஏன், மீண்டும் அந்த பாய்மர படகு போட்டியில் கலந்துவது ஏன். தடைகளை மீறி அந்த போட்டியில் ஜெயித்தாரா என்பது மண்டாடி கதை. மண்டாடி என்றால் பாய்மர படகு போட்டியில் படகை செலுத்தும் 6பேர் குழு தலைவன். சூரி அப்படிப்பட்ட தலைவன்.

சூரியின் சினிமா வாழ்க்கையில் மண்டாடி முக்கியமான படம். சென்னை பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல் குளத்தில் உதவியாளராக அவர் கேரக்டர் அறிமுகம் ஆகிறது. பின்னர், ஒரு கோபம் காரணமாக 20 ஆண்டுகளுக்கு பின் ஊருக்கு வருகிறார். நான் பாய்மரபடகு போட்டியில் ஜெயித்து காண்பிக்கிறேன் என டீம் ரெடி பண்ணி, அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார், வில்லனும், அவர் முன்னாள் நண்பருமான சுகாஸ் எதிர் டீமை தயார் செய்கிறார். போட்டி நடத்தும் முன்பு, பயற்சியில், போட்டியின் போது ஏகப்பட்ட பிரச்னைகள், சண்டைகள், அதை சமாளித்து கடைசியில் தனது அனுபவம், பிளானால் எப்படி கடலில் ஜெயிக்கிறார் என்ற கேரக்டரில் கலக்கியிருக்கிறார். நடுத்த வயது, இளம் வயது என இரண்டு கெட்அப்பில் வருகிறார். நடுத்த வயது கேரக்டரில் அழுத்தம், நடிப்பு ஆர்வம் தெரிகிறது. ஆக் ஷன் காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். கிட்டத்தட்ட அந்த கேரக்டராக மாறி, கிளைமாக்சில் அவர் பாய்மர படகு செலுத்தும் இடங்கள் பிரமாதம். பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கும், மகிமாவுக்குமான சீன், அவருக்கும் சத்யராஜ்குமான சீன் மனதில் நிற்கிறது. 20 ஆண்டுகள் கழித்து தனது காதலியை சந்திக்கும் இடம், பேசும் வார்த்தை வேறுவகை.

அவர் நண்பராக வரும் சுகாஸ் வில்லத்தனத்தில், கோபத்தில் மிரட்டியிருக்கிறார். இவர்களின் குருவாக வரும் சத்யராஜ்க்கும் பண்பட்ட நடிப்பு. இளமை, நடுத்த வயது என இரண்டு கெட்அப்பிலும் மகிகாவும் முத்திரை பதித்து இருக்கிறார். அந்த ஊர்காரர்கள், வில்லன் டீம், குடும்பம், போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள், அவர்களின் கோபம், வீரம், காதல் என எல்லாமே கதையுடன் செட்டாகி இருக்கிறது. ஒரு மீனவ கிராமத்தை, அவர்களின் வாழ்வியல், அங்குள்ள மனிதர்களை அப்படியே பதிவு செய்து இருக்கிறார்கள். குறிப்பாக, படத்தின் உயிர் நாடி, அந்த பாய்மர படகு போட்டிகள்தான்.

தமிழ்சினிமாவில் அந்தவகை விளையாட்டை யாரும் பதிவு செய்தது இல்லை. அந்த போட்டியின் தன்மை, விதிகள், வெற்றி பெற வைக்கும் யுக்தி, அதற்காக பயிற்சிகளை அவ்வளவு அழகாக, அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர். பாய் மரபோட்டிகள் நடக்கும் காட்சிகள், குறிப்பாக, கிளைமாக்சில் நடக்கும் அந்த போட்டி மெய் சிலிர்க்க வைக்கிறது. நடுக்கடலில் நடக்கும் வீரம், சண்டை, துரோகம் எல்லாமே சூப்பர். அவ்வளவு தடைகளை மீறி, இயற்கையுடன் போராடி அந்த கடலில் சூரி ஜெயிக்கும் காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று பார்வையாளர்களை உற்சாகமடைய வைக்கிறது.

ஒவ்வொரு சீனிலும் இயக்குனர், கேமராமேன், பைட்மாஸ்டர், நடிகர்களின் உழைப்பு தெரிகிறது. இந்த கடல், பாய்மர சீன்களை எளிதாக எடுக்க முடியாது, எப்படி எடுத்து இருப்பார்கள் என்ற கேள்வி வருகிறது. அது படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. சூரியின் வழக்கமான நடை, உடை, காமெடி எந்த இடத்திலும் வரவில்லை. அந்த கேரக்டராக மாறி, சிறந்த நடிப்பை தந்து, ஜெயித்து இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் பாடல்கள், பின்னணி இசை படத்துக்கு பிளஸ். ஆரம்பம் முதல் கடைசிவரை ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் உழைப்பு தெரிகிறது. கிராமத்து காட்சிகள், திருவிழா, கிளைமாக்ஸ் படகு போட்டியில் மல்டி கேமரா செ ட்டப்பில் அவர் எடுத்த காட்சிகள் கண்களுக்கு விருந்து. மேக்கிங் என்ற விஷயத்தில் மண்டாடி மற்ற படங்களில் இருந்து தனித்தன்மையுடன் தெரிகிறது. இப்படிப்பட்ட விளையாட்டு தமிழகத்தில், கடல் பகுதிகளில் இருக்கிறதா? அதை இப்படி விளையாடி ஜெயிப்பார்களா என்பது ஆச்சரியம். அது பார்வையாளர்களை இன்னும் உற்சாகமாக்குகிறது. இயக்குனர் மதிமாறன் புகழேந்திக்கு, படக்குழுவுக்கு பல விருதுகள் நிச்சயம்.

புது கதைக்களம், புது விளையாட்டு, நடிகர்களின் நடிப்பு, டெக்னீஷின்களின் உழைப்பு, சொல்ல வரும் கரு ஆகியவற்றால் மண்டாடி இந்த ஆண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகி இருக்கிறது.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சி சுந்தரம் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.