இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கை ஈடுபட தொடங்கியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக இன்று காலை தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடைத்தேர்தலில் போட்டியிட போவது இல்லை என அறிவித்துள்ளார். மற்ற கட்சிகள் தேர்தலுக்கான அறிவிப்புகளை வெளியிடும் வேளையில், திமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். தொகுதியின் எல்லைகளில் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு செய்வதற்காக மூன்று நிலை கண்காணிப்பு குழுக்களும் தொகுதிக்குள் சோதனை நடத்த மூன்று பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு அலுவலர், ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 3 போலீசாரும் ஒரு வீடியோ ஒளிப்பதிவாளரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் ஏதேனும் வந்தால் அந்த இடத்திற்கு பறக்கும் படை குழு சென்று சோதனை நடத்தும்.
வாகனங்களில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாகவோ, 10,000 ரூபாய்க்கு அதிகமான பரிசு பொருட்களை எடுத்துச் சென்றாலோ உரிய ஆவணங்கள் அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பரிசு பொருட்களும், ரூ.50 ஆயிரத்திற்கு அதிகமான பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.