விருதுநகர் அருகே தனியார் பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த மனோஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை பெருங்களத்தூரில் வசித்து வருபவர் மனோஜ் (37). இவரது மனைவி நித்திஷா
(32). இவர் பள்ளி ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஜெனிதா ஸ்ரீ என்ற மகளும், பிரசன்ன ஆதித்யா என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் 4 பேரும் சென்னையில் இருந்து காரில் திருநெல்வேலி
மாவட்டத்திற்கு தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் கார் மதுரை
திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் கணபதி மில் பிரிவு அருகே சென்று
கொண்டிருந்தது. அப்போது சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தது. அப்போது மனோஜ் ஓட்டி வந்த கார் பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்தில் மனோஜ் மற்றும் அவரது மனைவி நித்திஷா உயிர் இழந்தனர். மேலும் குழந்தைகள் இருவரும் படுக்காயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகள் இருவரின் கண்முன்னேயே அவர்களது பெற்றோர் பரிதாபமாக இறந்த சம்பவம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த சம்பவம் காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.








