பதவி விலக தயார்: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களிடம் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் போராட்டம் அந்நாட்டின் அரசியலில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.…

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களிடம் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் போராட்டம் அந்நாட்டின் அரசியலில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டம் காரணமாக, அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச, அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி தப்பியுள்ளார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்து போட்டோ எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் செய்தித் தொடர்பாளர் டினோக் கொலம்பேக், அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து புதிய அரசு அமைக்க தயார் என்றால், பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என ரணில் விக்ரமசிங்கே தெரிவித்ததாகக் கூறினார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே, அனைத்து மக்களின் பாதுகாப்பு உட்பட அரசாங்கத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் மாளிகைக்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

அங்குள்ள கட்டிலில் படுத்துக்கொண்டு செல்பி எடுத்துக்கொண்ட அவர்கள், பிரதமர் பதவியில் இருந்து ரணில் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதிபர் மாளிகையையும் பிரதமர் மாளிகையையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்திருப்பது இலங்கையில் முதல்முறையாக அரங்கேறி இருக்கிறது.

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.