பரமக்குடி அருகே காவலர் புகாரை வாங்க மறுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே அருளானந்தபுரம் கிராமத்தில் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் லூயிராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த அருள் சாமி மகன் ஜெர்மன்ஸ் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்த நிலையில் லூயி ராஜ் தன் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிப்பதற்காக குடும்பத்தினரோடு அங்கு தங்கி சிகிச்சை அளித்து வந்த நிலையில் லூயிராஜ் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஜெர்மன்ஸ் தனது நண்பர்களுடன் வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் ஏறி குதித்து வெளியூர் ஆட்களை வரவழைத்து வாழைமரம், கொய்யா மரம் போன்றவற்றை வெட்டி சாய்த்தும், மின்மோட்டார்,கடப்பாரை, வேலிக்கல் போன்றவற்றைத் திருடிச் சென்றுள்ளார்.
பின் மருத்துவமனையிலிருந்து திரும்பிவந்த லூயிராஜ் தன் வீட்டில் பொருட்கள் திருடப்பட்டும் மரங்கள் வெட்டப்பட்டும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பவம் குறித்து பார்த்திபனூர் காவல்நிலையத்தில் சிசிடிவி ஆதாரங்களோடு கடந்த 28.8.2022 அன்று புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் எதிர் தரப்பினரிடம் பேசி இருவரிடமும் சமாதானம் பேசியுள்ளனர்.
காவல்துறையில் பணியாற்றும் லூயிராஜ் தன்னிடமே புகார் வாங்க மறுத்துக் கட்ட பஞ்சாயத்து செய்யும் காவல்துறையினரை யை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தன்னிடம் இருந்த சிசிடிவி பதிவில் வீட்டில் நுழைந்து திருடும் நபர்களின் வீடியோ பதிவினை காவல்துறையினரிடம் அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஏதோ ஒரு காரணத்தால் நடவடிக்கை எடுக்கத் தயங்கும் காவல்துறையின் இந்தச் செயலைக் கண்டு லூயிராஜ் மனமுடைந்தார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, தான் ஒரு இந்து கிறிஸ்தவர் என்றும் தான் இந்துமதத்தைச் சேர்ந்த ப்ரியதர்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்ததிலிருந்து தனக்கு இடையூறு அளிப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் ஊரை விட்டே காலி செய்யும் நோக்கத்தில் கிராமத்தைச் சேர்ந்த சிலர் செயல்படுவதாகவும் கூறினார். இதனை நேரடியாகக் கூறமுடியாமல் இடப்பிரச்சனை என்று கூறி தங்களை ஊரை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ஜெர்மன்ஸ் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் முயற்சித்து வருகின்றனர்.மேலும் சம்பவம் நடந்த அன்று தாங்கள் வீட்டிலிருந்திருந்தால் தங்கள் உயிருக்கும் ஆபத்து நேர்ந்து இருக்கும் என்று கூறினார். 
சம்பவம் குறித்து அவரது மனைவி ப்ரியதர்ஷினி கூறியதாவது, நான் இந்துமதத்தைச் சேர்ந்தவள் என்பதால் தொடர்ந்து எங்களை ஊரை விட்டு விலக்கிவைத்து தொல்லை தருகின்றனர். எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதால் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். எங்கள் வீட்டில் திருடிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.







