நெல்லை அருகே கடைகள் மற்றும் ஹோட்டல்களை குறி வைத்து பல்புகளை திருடிய நபர் காவல்துறையினரிடம் சிக்கினார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பஜாரில் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தப்பட்டிருந்த எல்.இ.டி பல்புகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தன. அந்த வகையில் காய்கறி கடையில் பொருத்தப்பட்டிருந்த பல்பு ஒன்றும் திருடப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் தனது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார்.
சிசிடிவி வீடியோ காட்சியில் இரவு 9 மணிக்கு மேல் அனைத்து கடைகளையும் அடைத்த பிறகு வந்த நபர், பல்பினை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் திசையன்விளை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில் திசையன்விளை பேருந்து நிலையம் எதிரில் உள்ள புரோட்டா கடை ஒன்றில் மாஸ்டராக பணிபுரிந்து வந்த சிவகுமார் என்பவர் பல்புகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.







