ஜம்மு & காஷ்மீர் புறநகர் பகுதியான ‘தூதர்’ பகுதியில் இருந்த பழைய பாலம் ஒன்று கடந்த ஆண்டு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது. இந்த பாலத்தை சீர் செய்யும் நோக்கில் தடுப்புச் சுவர் மற்றும் அடித்தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நேற்று மாலை பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில், நான்கு தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு துறையினர், உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இந்த சம்பவத்தில் 3 ஊழியர்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.







