மத்தியபிரதேசம் : படகு விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

விபத்தில் காணாமல் போன கடைசி நபரின் உடலும் மீட்கப்பட்டது.

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணை உள்ளது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்த அணையில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி சொகுசு சுற்றுலா படகு சென்றுள்ளது. அந்த படகில் சுற்றுலா பயணிகள் உள்பட மொத்தம் 31 பேர் பயணித்துள்ளனர்.

அணையின் மையப்பகுதியில் படகு சென்றபோது திடீரென அணையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த அணைவரும் தண்ணீரில் தத்தளித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 16 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி காணாமல்போன மேலும் சிலரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 12வது உடல் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமடைந்து வந்தது. இந்த நிலையில் விபத்தில் காணாமல் போன கடைசி நபரின் உடலும் மீட்கப்பட்டது. தொடர்ந்து, பேரிடர் மீட்புப்படையின் தேடுதல் பணியும் நிறைவடைந்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.