மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், இன்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றுள்ளார்.
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 39 பேர், அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி வகுத்த நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தனது பதவியை முதலமைச்சர் உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவு இணைந்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. இந்த கூட்டணி அரசின் முதலமைச்சராக மகாராஷ்டிர பாஜக தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக கடந்த வியாழக்கிழமை பதவியேற்றார்.
நாளை சட்டப்பேரலையில் நம்பிக்கை வாக்குகோரி தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இந்நிலையில் இன்றே அவர் வெற்றி உறுதி செய்யப்பட்டது போல், சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றுள்ளார். 45 வயதான அவர் நாட்டிலேயே இளம் சட்டப்பேரவை சபாநாயகர் ஆவார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா பட்டோல் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததிலிருந்து மகாராஷ்டிர சட்டப்பேரவையில் அந்த பதவி காலியாகவே இருந்தது.
இந்நிலையில் அம்மாநில அரசியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து ஆட்சி மாற்றமும் நிகழ்ந்துவிட்ட முக்கியமான தருணத்தில் சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற்றது. பாஜக சார்பில் ராகுல் நர்வேகர் நிறுத்தப்பட்ட நிலையில், சிவசேனா சார்பில், ராஜன் சால்வி களம் இறங்கினார். இதில் 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு ராகுல் நர்வேகருக்கு கிடைத்து அவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவசேனா வேட்பாளர் ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 39 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உள்பட 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக கூறிவந்த ஏக்நாத் ஷிண்டே அதனை சபாநாயகர் தேர்தலில் உறுதி செய்துள்ளார்.
அதே நேரம் சிவசேனா எம்.எல்.ஏக்கள் சிலர் சபாநாயகர் தேர்தலில் மாற்றி வாக்களித்திருப்பதும் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 288 இடங்களில் ஒரு இடம் காலியாக உள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க 144 எம்.எல்.ஏக்களின் ஆதரவு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு தேவை. இன்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் 164 எம்.எல்.ஏக்கள் பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா பிரிவு கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதையடுத்து நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டே தனது பதவியை தக்க வைப்பார் என்பது இன்றே உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே துணை சபாநாயகர் நர்கார் ஷிர்வால், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் பதவியை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு அதற்கான நோட்டீசையும் அனுப்பினார். இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் சபாநாயகர் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு நிம்மதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.







