ஒழுங்கீனமாகச் செயல்பட்டால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆண்களை விடப் பெண்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். நீங்கள் அமர்ந்திருக்கும் பொறுப்பு சாதாரண பொறுப்பு அல்ல, உள்ளாட்சி அமைப்புகள் மக்களாட்சியின் உயிர் நாடி, அண்ணா, பெரியார் எனப் பல பெருந்தலைவர்கள் மேயராக இருந்த பொறுப்பு எனத் தெரிவித்தார். மேலும், திமுகவைப் பொறுத்தவரை நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம் எனக் குறிப்பிட்ட அவர், பள்ளிப்படிப்பை விட அரசியல் படிப்பு தான் தனக்கு மிகுந்த ஆர்வம் எனக் குறிப்பிட்டார்.
பொறுப்புகள் உடனடியாக கிடைத்து விடாது, அதற்காகக் காத்திருக்க வேண்டும், அத்தகைய பொறுப்பை நீங்கள் அடைந்துள்ளீர்கள், அதை நீங்கள் பாதுகாக்க வேண்டும், பதவிகளுக்கோ, பொறுப்புகளுக்கோ வருவது முக்கியமில்லை அதனைத் தக்கவைப்பது தான் முக்கியம் எனக்கூறிய முதலமைச்சர், தண்ணீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிற நீங்கள் தான் சக்தி படைத்தவர்கள், அதேபோல, தூய்மையான நகரத்தை உருவாக்க முடியுமானால் நீங்கள் தான் சக்தி படைத்தவர்கள், இத்தகைய சக்தியை நீங்கள் மக்களுக்காகப் பயன்படுத்துங்கள், எல்லா வளங்களும் எல்லா மாவட்டத்திற்கும் அமைவதில்லை, ஆனால், அனைத்து வளங்களையும் பெற்றுள்ள நாமக்கல்லில் இந்த மாநாடு நடைபெறுகிறது, இத்தகைய சிறப்புமிக்க நாமக்கல்லைப் போல அனைத்து மாவட்டங்களையும் மாற்ற வேண்டும் எனக் கூறினார்.
https://twitter.com/news7tamil/status/1543549444313870337
மேலும், அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற வளர்ச்சி பெறுவது உள்ளாட்சி பிரதிநிதிகள் கையில் தான் உள்ளது எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், 50 ஆண்டுகாலமாக மக்களைச் சந்தித்து வருகிறேன். மக்களின் தேவை குறித்து அறிந்து அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்தால் மக்கள் உங்கள் பக்கம் வருவார்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் எந்த வித புகாருக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், பெண் உறுப்பினர்கள் உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உங்கள் கணவருக்கு வழங்கிவிடாதீர்கள், இதனை மீறுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், கட்சி ரீதியான நடவடிக்கை மட்டுமின்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். ஓர் ஆண்டுக் காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நான் இட்ட ஒரே கையெழுத்து தான், அத்தகைய சக்தி படைத்த கையெழுத்தை மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்குப் பயன்படுத்துங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் களங்கம் ஏற்படுத்து வகையில் யாரும் செயல்பட்டு விடாதீர்கள், ஒழுங்கீனமாகச் செயல்பட்டால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்தார்.
https://twitter.com/news7tamil/status/1543560877454106625
அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து சமூகத்தினருக்குமான வளர்ச்சியை நோக்கி ஓடுங்கள், கொள்கையையும் கோட்பாடு தான் நிரந்தரமானது, விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஊருக்காக உழைக்க வேண்டும், பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களால் உருவானது இந்த இயக்கம், இந்த கழகம் உருவாக்க நினைப்பது தலை நிமிர்ந்த தமிழகம், அனைத்து துறையிலும் வளர்ச்சிபெற்ற தமிழகம், அதனை எட்ட நான் என்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளேன், அதுபோல் உங்களையும் நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்







