பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள போரிஸ் ஜான்சன், புதிய பிரதமர் பதவி ஏற்கும் வரை பதவியில் நீடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கும் உள்ளான முன்னாள் அமைச்சரான கிறிஸ்டோபர்…

இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள போரிஸ் ஜான்சன், புதிய பிரதமர் பதவி ஏற்கும் வரை பதவியில் நீடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கும் உள்ளான முன்னாள் அமைச்சரான கிறிஸ்டோபர் பின்ச்சர் என்பவரை, பிரதமர் போரிஸ் ஜான்சன் துணை தலைமை கொறடாவாக நியமித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, பின்ச்சர் நியமனத்திற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

எனினும், பின்ச்சரின் பின்னணி குறித்து ஜான்சனுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் தெரிந்தே அவர் தவறிழைத்துள்ளார் என்றும் இது அரசு மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு எதிரானது என்றும் கூறி நிதி அமைச்சர் ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரைத் தொடர்ந்து சுகாதரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித்தும் தனது பதவியை ராஜினாமா செய்தார். வடக்கு அயர்லாந்து அமைச்சர் பிராண்டன் லீவிஸ், மற்றொரு நிதி அமைச்சர் ஹெலன் வாடெலி, பாதுகாப்பு அமைச்சர் டாமியன் ஹிண்ட்ஸ் உள்பட பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் தொடர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல்வேறு யோசனைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும், அவற்றின் வெற்றியை பார்க்காமல் பதவி விலகுவது வருத்தம் அளிப்பதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமருக்கு தன்னால் முடிந்த ஆதரவை வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக உள்ளதை அடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.

இங்கிலாந்தின் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரூஸ் உள்பட பலரது பெயர்கள் பிரதமர் பதவிக்கு அடிபடுகின்றன.

ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.