சொத்து பிரித்து கொடுப்பதில் முன்விரோதம் ஏற்பட்டதால் தந்தையையே கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 62). இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு முத்துகுமார் என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனது ஒரு மகளை சங்கரன்கோவிலிலும் மற்றோரு மகளை இராயகிரி அருகே உள்ள குருவாச்சேரியிலும் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் மனைவி காளியம்மாளுக்கும் கருப்பையாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது மகன் முத்து குமாருடன் இலவன்குளம் கிராமத்தில் வசித்து வருகின்றார். கணவன் மனைவி இருவரும்
பிரிந்து வசித்து வந்த போதிலும் மனைவி காளியம்மாளுக்கும் கருப்பையாவுக்கும் விவசாய நிலத்தில் நாத்து நடவு செய்வதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மகன் முத்து குமார் தாய் காளியம்மாளுக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் மகன் முத்து குமாருக்கும் தந்தை கருப்பையாவுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் பச்சேரியில் உள்ள தனது வீட்டில் கருப்பையா கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து
கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கருப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவர் வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலில் ஈடுபட்டதால் அதில் ஏதும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தந்தையின் மரணம் குறித்து முத்துகுமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது முத்துகுமார் முன்னுக்கு பின் முரனாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் முத்துகுமாரை துருவி துருவி விசாரித்தனர். அப்போது தந்தையை கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கருப்பையா தன் மனைவிக்கு ஆதராவாகவும் தனக்கு எதிராகவும் செயல்பட்டதால் தனது முழு சொத்துக்களையும் தனது இரு மகள்களுக்கு எழுதி வைக்க முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த முத்து குமார் தனது தந்தையிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்தமுத்து குமார் சொத்திற்காக தனது சொந்த தந்தையையே கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி இன்று அதிகாலை தனது தந்தை பச்சேரி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, கத்தியால் தனது தந்தை கருப்பையாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் முத்துகுமார் ஒன்றும் நடக்காதது போல நாடகமாடியுள்ளார். ஆனால் காவல்துறையினர் விசாரணையில் அவர் மாட்டிக்கொண்டார். குற்றவாளியை ஒரே நாளில் கைது செய்ததற்காக புளியங்குடி காவல்துறையினரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் வெகுவாக பாராட்டினார்.
– இரா.நம்பிராஜன்








