ஆப்கானில் ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 2 ரஷ்ய அதிகாரிகள் பலி

ஆப்கானில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 2 பேர் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷ்ய…

ஆப்கானில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 2 பேர் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷ்ய தூதரகம் அமைந்த பகுதியருகே தருலாமன் சாலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எனினும், குண்டுவெடிப்புக்கான காரணம் பற்றிய தகவல்கள் எதையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே மக்கள் விசாக்களை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்து உள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அவர்களில் பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பில் 2 ரஷ்ய தூதர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை ரஷ்ய அரசுடன் தொடர்புடைய ஆர்.டி. என்ற ஊடகம் தகவல் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இது உயிரிழப்பு வெடிகுண்டு தாக்குதல் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தலீபான்கள், தாக்குதல் நடத்துவதற்கு வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதியை கண்டறிந்த பாதுகாவலர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர் வெடிகுண்டை வெடிக்க செய்திருக்க கூடும் என நம்பப்படுகிறது என செய்தி தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. தலிபான்கள் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான உறுதிமொழிகளை தலிபான்கள் மீறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.