காங்கிரஸ் காட்டும் கருப்பு கொடி மக்களிடையே பிரதமர் மோடி மீதான ஈர்ப்பை அதிகரிக்கும் என பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
புதிய விமான நிலைய முனையம் திறப்பு, சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை
தொடக்க நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர்
மோடி இன்று சென்னை வர உள்ளார். இதனையொட்டி, பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக அவர் பயணிக்க உள்ள சாலைகளை அலங்கரிக்கும் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை, பல்லவன் சாலை மற்றும் சிவானந்தா சாலை வழியாக
பிரதமர் மோடி செல்ல உள்ள நிலையில் அப்பகுதிகளில் பேனர்கள், வாழைமரம் அமைப்பது, தோரணம் கட்டுவது உள்ளிட்ட பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டனர். இதில், பல்லவன் சாலையில் நடைபெறும் பிரதமர் வரவேற்பு ஏற்பாடு பணிகளை பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் பார்வையிட்டார்.
தொடர்ந்து காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தி பிரதமர் மோடியை பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அமைக்கப்படும் பார்வையாளர் பகுதிகள், பேனர்கள் போன்றவை அமைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், பிரதமர் மோடியை
வரவேற்கும் விதமாக இரவு நேரத்திலும் பாஜக தொண்டர்கள் தோரணம் கட்டுவது,
வாழைமரம் கட்டுவது என உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர். பிரதமர் மோடியின் வருகையை ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு எதிர்நோக்கி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி காட்ட உள்ளனர். எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது 3 மாநிலங்களில் தான் ஆட்சியில் உள்ளது. ராகுல்காந்தி செய்த தவறுக்கு நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது. காங்கிரஸ் கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்றால் சூரத் நீதிமன்றத்தில் தான் கட்ட வேண்டும். பாஜகவிற்கோ, பிரதமர் மோடிக்கோ கருப்புக் கொடி காட்ட நினைப்பது தவறு.
மேலும், மேலும் மக்களிடம் தவறான எண்ணத்தை பெறுகிறார்கள். காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்திருந்தால் இந்திரா காந்தியைப் போல் 2வது எமர்ஜென்சியை அறிவித்திருப்பார்கள். காங்கிரசின் கருப்புக் கொடி காட்டும் செயல் தமிழக மக்களிடம் பாஜக மற்றும் பிரதமர் மோடி மீதான ஈர்ப்பை அதிகரிக்க செய்யும். 
ஸ்டெர்லைட் ஆலையைப் போல் மத்திய அரசு இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தை நடத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவில் 4 இடங்களில் இதுபோன்ற ஆலைகள் நடத்தப்பட்டு
வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட காரணத்தினால் பல ஆயிரம் கோடிக்கு
சீனாவில் இருந்து காப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது. 50 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டத்திற்குட்பட்டு ஸ்டெர்லைட் ஆலை செயல்படுகிறதா என்பதை கவனிக்காமல் விட்டது அதிகாரிகள் தவறு. அதிகாரிகள் தான் முக்கிய காரணம். தூத்துக்குடி பல ஆயிரம் கோடி இழந்துள்ளது. கூட்டணியைப் பொறுத்தவரை மேலிட தலைவர்களின் முடிவுக்கு ஏற்ப மாநில தலைவர் செயல்படுவார் எனத் தெரிவித்தார்.
மேலும், காமராஜர் சாலையில் உள்ள விவேகாணந்தர் இல்லத்தில் நடைபெறும் ராமகிருஷ்ண மடத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால் விவேகானந்தர் இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு அதனை சுற்றியும் பாஜகவினர் பேனர், பார்வையாளர் பகுதி ஆகியவற்றை அமைத்துள்ளனர்.







