ஆங்கிலம், இந்தியில் மட்டுமே சிஆர்பிஎஃப் தேர்வு! – எம்பி கனிமொழி கண்டனம்

மத்திய ரிசர்வ் காவல் படையின் காவல் பிரிவுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள துணை ராணுவப்…

மத்திய ரிசர்வ் காவல் படையின் காவல் பிரிவுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உலகில் உள்ள துணை ராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படையாக மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) உள்ளது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் இப்படை மாநில அல்லது யூனியன் பிரதேசங்களில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது.

இந்த மத்திய ரிசர்வ் காவல் படையின், காவலர் பிரிவுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி இப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை பெறப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023 : ஐதராபாத் அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி

இந்நிலையில், இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி கருணாநிதியும் தனது கண்டனக் குரலை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய ரிசர்வ் காவல் படையின் காவலர் – CT(Tradesman/Technical & Pioneer) பணிகளுக்கானப் போட்டித் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

இந்தி பேசாத மக்களிடம் இந்தியைத் திணிக்கும் செயல்களை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டு, நமது அரசமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் தேர்வுகளை நடத்திட வலியுறுத்துகிறேன். பல மொழியினங்களின் ஒத்துழைப்பில் உருப்பெற்றதே இந்திய ஒன்றியம் என்பதை ஒன்றிய பாஜக அரசு மறவாது இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.