இளைஞர்களை டார்கெட் செய்யும் பாஜக

தமிழ்நாட்டில் பாஜகவை வலுவான கட்சியாக வளர்தெடுக்க வேண்டும் என மாநில நிர்வாகிகளுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். அதற்காக தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதம் இளைஞர்களை இணைக்க…

தமிழ்நாட்டில் பாஜகவை வலுவான கட்சியாக வளர்தெடுக்க வேண்டும் என மாநில நிர்வாகிகளுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். அதற்காக தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதம் இளைஞர்களை இணைக்க சிறப்பு முகாம் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இளைஞர்களை குறிவைத்து அக்கட்சியின் தலைவர் பேரறிஞர் அண்ணா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக இளைஞர்களிடையே அவரது தனிநாடு கொள்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. சீனப் போரின்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியானது, பிரிவினைவாத தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தது. நாட்டின் நலனுக்காக அதனை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அண்ணா, தேச ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காமல், எங்களது கோரிக்கைகளை முன்னெடுத்து செல்வோம். தனிநாடு கோரிக்கையைதான் கைவிட்டுள்ளோம்.

அதேநேரத்தில் இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி போன்றவை அப்படியே உள்ளன என்றார். அன்று அண்ணா பற்ற வைத்த நெருப்புதான் இன்று வரை தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தொடர்வது காரணமாக உள்ளது என பாஜக தலைமை கருதுகிறது. இந்த சூழலை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு உள்ளதாக அக்கட்சி கருதுகிறது. இதற்கு மிக முக்கிய தேவை, இளைஞர்களிடையே பாஜகவின் தேசிய சிந்தனைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முடிவெடுத்துள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாஜக நிர்வாகிகளில், இளைஞரணி அணி நிர்வாகிகள் பட்டியலில் யார் யார் இடம் பெற்றுள்ளார்கள். அவர்களது சமூக பங்களிப்பு என்ன புள்ளி விபரங்களை எல்லாம் பாஜக தேசிய தலைமை முழுமையாக அலசி ஆராய்ந்துள்ளது. அதற்கு காரணம், அக்கட்சியில் வலுவான அணியாக இளைஞரணியை கொண்டு வருவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். ஜூலை மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் பாஜகவில் இளைஞர்களை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களை நடத்தவுள்ளதாம். இதில் 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேசிய சிந்தனைகளை வளர்க்கும் சிறப்பு பயிற்சிகள் எல்லாம் வழங்க அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

எந்த மாவட்டத்தில் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் அதிகளவு புதிய தொண்டர்களை இணைக்கிறார்களோ, அவர்களுக்கு வரும் தேர்தலில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. தேசிய பாஜகவின் இந்த நடவடிக்கை எந்தளவிற்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.