கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்திருக்கும் வேளையில் ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கர்நாடக அரசியல் களம், அனலாக மாறியுள்ளது. இதற்கு காரணம் பாஜக அதன் Statergy-யை மாற்றி இருப்பதே.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் ஆளும் கட்சி மீதும், அதன் முன்னாள் தலைவர்கள் மீதும் மக்கள் அதிருப்தியில் இருப்பதால், புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்தது பாஜக. எனவே ஏற்கனவே சிட்டிங் எம்.எல்.ஏக்களாக இருக்கும் ஜெகதீஸ் ஷட்டர் உள்ளிட்ட 17 எம்.எல்.ஏக்களுக்கு பாஜக தலைமை வாய்ப்பு மறுத்திருப்பதுதான் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது என்று சொல்லலாம்.
வயது முதிர்வு காரணமாக ஜெகதீஸ் ஷட்டருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனக்கு சீட் வழங்கியே ஆக வேண்டும். இல்லையென்றால் கட்சியில் இருந்து வெறியேறுவேன் என ஜெகதீஸ் ஷட்டர் கண்டிப்புடன் சொல்லிவிட்டதால், ஷட்டரை சமாதானம் செய்யும் முயற்சியில் அமைச்சர்கள், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை போன்றவர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.
இதையும் படியுங்கள் : கர்நாடகாவில் பாஜகவின் வெற்றியைப் பதம் பார்க்குமா “உள்கட்சி அதிருப்தி” ?
கர்நாடகவில் பாஜக ஆட்சி பிடிக்க திணறிய காலங்களில் பாஜகவிற்கு உறுதுணையாக இருந்தவர் ஜெகதீஸ் ஷட்டர். 30 ஆண்டுகள் பாஜகவில் உறுப்பினராக இருந்த ஷட்டர், எம்.எல்.ஏ, சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர், அமைச்சர், முதலமைச்சர் என பாஜகவில் அவர் வகிக்காத பதவிகளே இல்லை என கூறலாம். இந்த நிலையில் பாஜக தனக்கு சீட் வழங்காத அதிருப்தியில், அவர் காங்கிரஸில் தன்னை இணைத்துகொண்டார்.
இதேபோல முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவராகவும் வலம் வந்த லக்ஷ்மன் சவதிக்கும் இந்த முறை சீட் வழங்கப்படாததால் காங்கிரஸில் இணைந்துள்ளார். பாஜகவின் இரு முக்கிய தலைவர்கள் காங்கிரஸில் இணைந்து இருப்பது காங்கிரஸின் பலத்தை மேலும் கூட்டி இருக்கிறது எனலாம். அடுத்து வரும் நாட்களில் காங்கிரஸில் மேலும் பல முக்கிய தலைவர்கள் இணைவார்கள் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக கூறப்படுகிறது.
தவறிலிருந்து பாடம் கற்று கொண்ட காங்கிரஸ்
பல மாநிலங்களில் தொடர்ந்து தோல்வி முகமே காட்டி வரும் காங்கிரஸ், தற்போது குஜராத் தேர்தலுக்கு பிறகு விழித்துக்கொண்டது என்றே சொல்ல வேண்டும். இதன் காரணமாக தான் கடந்தமுறை தேர்தல்கள் போன்று இல்லாமல், இந்த முறை ஒரே கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல், 3 கட்டங்காளாக வெளியிட்டது. இது பாஜகவின் Formula. கட்சியில் சீட் ஒதுக்கப்படவில்லை என்றால், அதிருப்தியில் தலைவர்கள் கட்சியிலிருந்து தாவுவதும், அதை பாஜக லாவகமாக கையாள்வதும் என இருந்தது. பாடம் கற்றுக்கொடுத்த குருவின் தலையிலேயே கைவைக்கும் வேலையில் காங்கிரஸ் இறங்கி இருக்கிறது.
கவனமாக காய் நகர்த்தும் காங்கிரஸ்
குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு எதிராக பேசக்கூடாது. அதேபோல இந்துத்துவாவா? மதச்சார்பின்மையா? என்ற வாதத்தை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல கண்டிஷன்கள் காங்கிரஸ் மேலிடம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலின்போது பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதுதான் காங்கிரஸ்க்கு பின்னடைவை ஏற்படுத்தியது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இதற்கு பதிலாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அரசுக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து அதிகமாக பேசவும், பாஜக ஆட்சியில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளை கையிலெடுக்க அக்கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. இப்படி எதிராளியின் தவறுகளை தனக்கு சாதகமாக்க மிக கவனமாக காய் நகர்த்தி வருகிறது காங்கிரஸ்.
படு உஷாராக இருக்கும் காங்கிரஸ்
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அன்னபாக்கியம் திட்டத்தில் 10 கிலோ அரிசி இலவசம், 200 யூனிட் மின்சாரம் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ஆயிரம் உதவித்தொகை மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை உள்ளிட்ட கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வேலையை தீவிரப்படுத்த கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர சமீபத்தில் நடைபெற்ற ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் சோனியா காந்தியும் பங்கேற்றது பெரும் கவனத்தை பெற்று இருந்த நிலையில், அதை அனைத்தையும் வாக்குகளாக மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் காங்கிரஸிற்கு ஏற்பட்டுள்ளது.
இதுபோல நந்தினி – அமுல் பால் விவகாரம் , அதானி விவகாரம், ராகுல் காந்தி பதவி பறிப்பால் ஏற்பட்டுள்ள அனுதாப அலை போன்றவை காங்கிரஸுக்கு சாதகமான சூழலை அமைத்து கொடுத்திருப்பதால், தற்போது கர்நாடகவில் காங்கிரஸின் கை ஓங்கியே இருக்கிறது. வருகாலங்களில் இது இப்படியே நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்….
– வசந்தி, நியூஸ்7 தமிழ்.









