குறிப்பிட்ட சமூகத்தை குறைவைத்து உத்தரபிரதேசம உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் மக்கள் தொகை பிரச்னையை கையில் எடுத்திருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சசிதரூர் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வரைவு சட்டத்தை உபி அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி உபி மாநிலத்தை சேர்ந்தோர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அரசு சலுகைகளை ரத்து செய்யப்படும். அதே போல இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்தினருக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதே போல பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலம், லட்சத்தீவு யூனியன் பிரதேசம் ஆகியவற்றிலும் இது போன்ற சட்டத்தை கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதே போன்ற ஒரு சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சில பாஜக எம்.பிக்கள் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் குறித்த தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பியும் மூத்த தலைவருமான சசிதரூர் கூறியதாவது:
மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து இப்போது பேசுவது முற்றிலும் தவறான ஒன்று. இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் குழந்தை பிறப்பு விகிதத்தில் மாறுபட்ட நிலைகளைக் கொண்டிருக்கின்றன. அரை நூற்றாண்டாக இது கருத்தில் கொள்ளப்படாத விஷயமாகவே இருக்கிறது.

இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும், அடுத்து வரும் ஆண்டுகளில் மக்கள் தொகையில் வளர்ச்சி இருக்காது. நாடு எதிர்கொண்டுள்ள இந்த சவாலைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து உள்நோக்கத்துடன் ஆளும் கட்சி இந்த பிரச்னையை எழுப்பி உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மூன்று மாநிலங்களும் பேசுவது தற்செயல் அல்ல. அவர்கள் உள்நோக்கத்துடன் கொண்டு வர திட்டமிட்டுள்ள சட்டத்தின் பாதிப்பு யாருக்கு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
நமது நாட்டு அரசியலில் இந்துத்துவா அமைப்புகள் மக்கள் தொகை விவகாரங்கள் குறித்து உண்மையில் எந்த ஒரு ஆய்வும் மேற்கொண்டதில்லை. அவர்களுடைய நோக்கம் என்பது அரசியல் மற்றும் மத நோக்கம் கொண்டதுதான்.
வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மோசமாக செயல்பட்டது. தடுப்பூசி கொள்கையில் தோல்வி, விவசாயிகள் போராட்டம், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி குறைந்திருப்பது ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்திருக்கின்றன. வேலையின்மையும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இருக்கிறதா என்று பிரான்ஸ் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. சீனா-இந்தியா இடையே சுமுகமான உறவு இல்லை
இவைபற்றியெல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அரசு தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டால், நிச்சயமாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கூச்சம், குழப்பம் செய்வதற்கே அவசியம் இருக்காது.
இவ்வாறு சசிதரூர் கூறினார்.







