பாஜகவில் இளைஞரணிக்கு புதிய மாநில நிர்வாகிகள் யார் ?

பாரதிய ஜனதா கட்சி இளைஞரணியின் மாநில நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த 6 மாதத்தில் ஒவ்வொரு கிராமம் வாரியாக சென்று கிளைகளை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளதாக தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை…

பாரதிய ஜனதா கட்சி இளைஞரணியின் மாநில நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த 6 மாதத்தில் ஒவ்வொரு கிராமம் வாரியாக சென்று கிளைகளை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளதாக தெரிகிறது.

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் வலுவாக காலுன்ற இளைஞர்களின் ஆதரவு தேவை என கருதுகின்றனர். அதற்காக பாஜகவின் இளைஞரணியை வலுப்படுத்தும் பணியில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் ஷிவா மாநில அளவில் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் டி.ராஜசேகர் மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில செயலாளர்களாக திருச்சியை சேர்ந்த ஸ்ரீராம், திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த யோகீஸ்வரன், மாநில அலுவலக செயலாளராக தென் சென்னையை சேர்ந்த சரவணகுமார், மாநில சமூக ஊடக பொறுப்பாளராக நாமக்கலை சேர்ந்த பிரவீன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர்களாக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஜீவா, திருச்சி நகரை சார்ந்த சிவக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே இளைஞரணி பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் சுமார் 60 பேருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என தெரிகிறது.

இளைஞரணி மாநில நிர்வாகிகளை பொறுத்தவரை ஒவ்வொரு கிராமந்தோறும் சென்று இளைஞரணிக்கு என கிளை அமைப்புகளை உருவாக்க வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூறியதாவது, பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாவட்ட அளவில் தலைவர் என ஒருவர் உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக மண்டல தலைவர்கள் உள்ளனர்.இந்த கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக கிராமந்தோறும் இளைஞரணிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள் மூலம் பிரதமர் மோடியின் கனவு திட்டங்களை மக்களிடையே எடுத்து செல்வதும், திராவிட சித்தாங்களால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன என்பதை அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்வதுமே அவர்களது பணியாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பாஜக இளைஞரணி மாநில துணைத் தலைவர் டாக்டர் டி ராஜசேகர் கேட்டபோது, ஜல்லிகட்டு போராட்டத்தில் முன்னின்று களமாடிய என்னை போன்ற இளைஞர்களுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு வழங்கிய மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் ஷிவாவிற்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். எங்களுடைய இலக்கு என்பது தமிழ்நாட்டில் உள்ள எல்லா கிராமங்களிலும் இளைஞரணிக்கு என கிளைகளை உருவாக்குவது, இதில் 10 முதல் 15 பேர் வரை பொறுப்பில் இருப்பர். இவர்களை கொண்டு மாநில அளவில் ஒரு வலுவான கட்சியாக எங்கள் இயக்கத்தை மாற்றுவதுதான் என்றார். மேலும், இளைஞரணியின் அடுத்த நகர்வு என்ன என்பதை வரும் நாட்களில் மாநில தலைவர் அண்ணாமலை முறைப்படி அறிவிப்பார் என்கிறார்.

திமுக இளைஞரணியை போல் மாவட்ட அளவில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் பாஜக இளைஞரணி நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க திட்டம் உள்ளதா ? என்ற கேள்விக்கு, உங்கள் கேள்விக்கு எல்லாம் விடை அடுத்த மாதம் எங்கள் மாநில தலைமை தெரிவிக்கும் என தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.

இதற்கிடையே,  வரும் 4ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட  இளைஞரணி மாநில நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மாநில தலைமையகமான கமலாயத்தில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.