சிறிய உற்பத்தியாளர்களும் ஏற்றுதி செய்யலாம்: பிரதமர் மோடி

சிறு உற்பத்தியாளர்களும் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான(MSME) நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.…

சிறு உற்பத்தியாளர்களும் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான(MSME) நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, MSME துறையின் வளர்ச்சிக்காக சிறப்பாக பங்காற்றிய மாநிலங்கள், மாவட்ட நிர்வாகங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நமது நாட்டின் பல சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுதி செய்து வருவதாகக் குறிப்பிட்டார். இவ்வாறு கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி மூலம், நமது நாட்டில் 18 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ரூ.500 கோடிக்கும் அதிகமாக டிஜிட்டல் முறையில் பணம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நமது நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தன்மையுடன் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை நமது நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்தான் நமது நாட்டின் மிகப் பெரிய பலம் என தெரிவித்த நரேந்திர மோடி, ஒரு எளிமையான உதாரணத்தின் மூலம் கூற வேண்டுமானால், நமது நாடு சம்பாதிக்கும் ஒவ்வொரு 100 ரூபாயிலும், 30 ரூபாய் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூலம் கிடைப்பதாகக் குறிப்பிட்டார்.

அனைத்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் அரசின் GeM இணையத்தில் பதிவு செய்து பயனடையுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ரூ.200 கோடிக்கும் அதிகமான தொகை கொண்ட டெண்டர்களை மட்டுமே சர்வதேச அளவில் கோர வேண்டும் என்றும், அதற்குக் கீழான டெண்டர்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நமது நாட்டின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பலன்பெற வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சிறிய நிறுவனமாக இருந்தாலும், உங்கள் பொருட்கள் உலகின் ஏதோ ஒரு பகுதியில் உள்ளவர்களுக்குத் தேவையானதாக இருக்கும் என தெரிவித்த பிரதமர் மோடி, எனவே, ஏற்றுமதியில் சிறு நிறுவனங்களும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.