“மேகதாது விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸும் சதி செய்கிறது” – அன்புமணி பேட்டி!

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என ராகுல்காந்தி ஒரு வரி கூறினால் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலக தயார் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மேகதாது அணை தொடர்பாக கர்நாடக சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய பாதகமாக இருக்கும். மேகதாது அணையை நாம் ஏற்று கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. அங்கீகரிக்கப்படாத ஒன்று குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் கிடையாது. மத்திய அரசிடம் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேகதாது அணையை கட்ட கூடாது என்று திட்ட வரைவை திரும்ப உத்தரவிட வேண்டும்.

கர்நாடக அணையில் 62 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. தண்ணீர் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று ஆணையம் 2 முறை சொல்லியும், தண்ணீர் இல்லை, திறந்து விட மாட்டோம் என்று சொல்லும் கர்நாடகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதா?

மேகதாது அணை கட்டும் முன்பே தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடக அணை கட்டினால் குடிக்க கூட தண்ணீர் இருக்காது. மிகப்பெரிய தவறு முதலமைச்சர் கர்நாடக போக கூடாது. முதலில் அணைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள். இது தவெக பிரச்சனை கிடையாது. தமிழ்நாடு பிரச்சனை. கர்நாடக வேறு வீதமாக கொண்டு செல்கின்றனர். இந்த சூழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் விழக்கூடாது. மத்தியில் உள்ள பா.ஜ.கவும் கர்நாடகவில் உள்ள காங்கிரசும் மேகதாது விவகாரத்தில் சதி செய்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாடும் முதலமைச்சரும் அதில் விழக்கூடாது. ஒட்டுமொத்த விவசாயிகள், மக்களின் கோரிக்கை, கடந்த காலங்களில் காவிரி தண்ணீருக்காக பிரச்சனை நடத்தப்பட்டது. மேகதாது அணைக்காக அல்ல. மேகதாது அணை கட்ட கூடாது என்பதில் கர்நாடக சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. இந்த தவறான போக்கை முதலமைச்சர் தவிர்க்க் வேண்டும்.

மாநிலங்களவையில் என்னுடைய கேள்விக்கு மத்திய நீதி வளத்துறை அமைச்சர் அளித்த பதிலில் உச்ச நீதிமன்றம் 2018ம் ஆண்டு தீர்ப்பில் எந்த இடத்திலும் தமிழ்நாடு அனுமதி பெற்று தான் கர்நாடகவில் அணை கட்டவேண்டும் என்று இல்லை என பொய்யான தகவலை வெளியிட்டு உள்ளது கண்டிக்கத்தக்கது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க டெல்லியில் தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பிக்ளிடம் பேசிக் கொண்டு இருக்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பில் 1892ம் ஆண்டு ஒப்பந்தம், 1924ம் ஆண்டு ஒப்பந்தம் ஆகியவை ரத்தாகவில்லை. விடுதலைக்கு பின்னரும் அந்த ஒப்பந்தங்கள் தொடர்வதாக தெளிவாக சொல்லி இருக்கிறது. மேல் மடை மாநிலத்தில் கட்டுமானம் என்றால் கீழ் மடை மற்றும் கடை மடை மாநிலங்களின் அனுமதி பெற வேண்டும் என ஒப்பந்தம் இருக்கிறது. இது உலக அளவிலான ஒப்பந்தம். பல நாடுகளுக்கு இடையே பாயும் ஆறுகள், இந்தியாவில் பல மானிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளுக்கு இது தான் ஒப்பந்தம். காவிரி நடுவர் மன்ற தீர்வும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும் அப்படி தான் உள்ளது. பொய் சொல்லும் மத்திய இணை அமைச்சரை கண்டிக்கிறோம்.

முதலமைச்சர் எங்களை பிரதமரிடம் அழைத்து கொண்டு செல்லட்டும். பிரதமரிடம் நாங்கள் வலியுறுத்த தயாராக இருக்கிறோம். ராகுல்காந்தியிடம் சொல்லி தடுத்து நிறுத்த மாணிக்கம் தாகூருக்கு தைரியம் இருக்கா? அந்தமானில் காடுகளை அழித்து கட்டுமானம் செய்ய கூடாது என்று சொன்ன ராகுல்காந்தி மேகதாதுவில் காடுகள், 3 புலிகள் சரணாலயங்கள் அழித்து அணை கட்டும் சூழல் வரும். இதனால் அணை கட்ட கூடாது என்று சொல்ல ராகுல்காந்திக்கு தைரியம் இருக்கா? ஆகஸ்டு மாதம் 1ம் தேதி சென்னை வரும் ராகுல்காந்தி மேகதாது அணை கட்ட கூடாது. தமிழ்நாட்டிற்கு எதிரானது. இதை ராகுல்காந்தியிடம் சொல்ல மாணிக்கம் தாகூருக்கு தைரியம் இருக்கா. எப்படி வேண்டுமானாலும் பேசலாம். கர்நாடகவில் மேகதாது அணை கட்ட கூடாது என ஒரு வரியை ராகுல்காந்தி சொன்னால் நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.