“செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்” – அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மீனவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை மருத்துவ கல்லூரி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், மருத்துவக் கல்லூரியில் வீடியோ உருவாக்க அரங்கை திறந்து வைத்து, முதலாம் ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்கள் வரவேற்பு நிகழ்வான White Coat Ceremony நிகழ்வில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அருண்ராஜ்,

“மருத்துவர்களுக்கான இரண்டாவது கலந்தாய்வு இன்று டிஎம்இ அலுவலகத்தில் மாலை நடைபெற உள்ளது. காலியாக உள்ள இடங்கள் முழுவதும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காலம் காய்ச்சல் அதிகமாக பரவக்கூடிய நேரம். பொது இடங்களில் செல்லும் பொழுது முக கவசம் பயன்படுத்த வேண்டும்.

25,535 நபர்கள் கடந்த ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட உள்ளனர். தினசரி கொசு ஒழிப்பு பணியாளர்கள் தனது பணிகளை செய்து வருகிறார்கள். டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பாபுவின் உடல்நலம் சரியாக உள்ளது. சென்னை மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இந்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மீனவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். 4000-க்கும் மேற்பட்ட செவிலியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த காலி பணியிடங்களை நிரப்ப வேண்டிய தேவை உள்ளது அதனால் நிரப்பப்படும். எங்கு பார்த்தாலும் செவிலியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கூட செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. செவிலியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும். வெளிப்படை தன்மையாக இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மூன்று மாதங்களில் 11,322 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளத. பாதிப்பை கருத்தில் கொண்டு அடுத்த கட்டங்கள் மருத்துவ முகாம்கள் நடைபெறும். மொத்தம் 15,933 பேர் இந்த வருடம் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.