காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து குலாம் நபி ஆசாத் கட்சியில் இணைந்த முக்கிய தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர். இதனால் குலாம் நபி ஆசாத் அதிர்ச்சியடைந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி மூத்த தலைவர்கள் கட்சி மேலிடத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதில், குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். காங்கிரஸில் இருந்த அவரது விசுவாசிகள் பலர் அங்கிருந்து விலகி ஜனநாயக ஆசாத் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்வு ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.
ஆனால், அவர்கள் தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகியுள்ளனர். ஜனநாயக ஆசாத் கட்சியை சேர்ந்த 17 தலைவர்களை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
மேலும், ”இரண்டு வாரங்களில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறோம். இந்த சூழலில் அவர்கள் இணைந்திருப்பது எங்கள் கட்சிக்கு மகிழ்ச்சியை தருகிறது. இது தொடக்கம்தான். யாத்திரை தொடங்கிய பிறகு அனைத்து மக்களும் காங்கிரஸின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
குலாம் நபி ஆசாத்தும் காங்கிரஸில் மீண்டும் இணைய போவதாகவும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வலம் வருகிறது. இதுகுறித்து கே.சி.வேணுகோபாலிடம் கேட்டபோது, “காங்கிரஸ் கொள்கை மீது நம்பிக்கையுள்ள யார் வேண்டுமானாலும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ளலாம். உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெஹுபா சயீத் ஆகியோரை இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.