சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப திட்டம்!

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராணி மேரி கல்லூரியில் நாளை (பிப் 24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு…

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராணி மேரி கல்லூரியில் நாளை (பிப் 24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை (பிப். 24) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு100-வது வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் பிப்.24-ம் தேதி காலை 8 முதல் மாலை 3 மணி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமில் கலந்து கொண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளார். மேலும் வேலைவாய்ப்பு முகாமுக்காக 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் 30,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐடிஐ தொழில் கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள் உள்ளிட்ட தகுதியுள்ள நபர்களுக்கும் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைத்து வேலை தேடுபவர்களும் https://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.