பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் எழுத்தாளர் பவா செல்லத்துரை போட்டியாளராக பங்கேற்கிறார். இது உண்மையில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் புத்தக வாசிப்பாளர்களின் புருவத்தை உயரச் செய்துள்ளது.
சென்னையை அடுத்த திருவண்ணாமலையில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பவா செல்லதுரை. திண்டிவனம் அரசினர் கலைக்கல்லூரியிலும், திருவண்ணாமலைக் கல்லூரியிலும் இளம் வணிகவியல் (பி. காம்) பட்டப் படிப்பு பயின்றார். கடந்த 1994ம் ஆண்டு கே.வி.ஷைலஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பவா செல்லத்துரை தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். கம்யூனிசத்தில் அதிக நாட்டம் கொண்டவர். இன்றைய டெக்னாலஜி உலகில் புத்தகம் வாசிப்பவர்கள் அறவே குறைந்துவிட்டனர். படித்து தெரிந்து கொள்வதை விட பிறர் சொல்வதைக் கேட்டு தெரிந்து கொள்வதில் மக்கள் பெரிதும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். பல கதை சொல்லிகள் யூடியூப் மற்றும் பாட்காஸ்ட் தளங்கள் மூலம் மக்களிடையே கதைகளை எடுத்துச் சென்றாலும், அதில் என்றும் முதலில் நிற்பவர் பவா செல்லதுரை!
தனது குரலுக்காகவும், கதை சொல்லும் விதத்திற்காகவும், பல நூறு கிலோ மீட்டர்கள் கடந்து வந்தும் இவரிடம் கதை கேட்கக் கூடிய ரசிகர்கள் இருக்கிறார்கள். எழுத்தாளரான இவர், எழுதுவதைவிட குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறதாக அபரிமிதமாக நம்புகிறார்.
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் கதை சொல்லி என பன்முகத்தன்மை கொண்ட இவர், ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். பேரன்பு, சைக்கோ, ஜெய்பீம் போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை, நீர் மற்றும் கோழி, எல்லா நாளும் கார்த்திகை, பங்குக்கறியும் பின்னிரவுகளும், சொல்வழிப் பயணம், இலக்கில்லா பயணங்கள் போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 7 -ல் நுழைந்திருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கையில் ஒரு புத்தகத்தோடு உள்ளே நுழைந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் மேடையில் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் பேசும் போது, நீங்கள் இங்கு இருப்பது எனக்கு, இந்த மேடைக்கும் பெருமை சேர்க்கிறது என்று கூறினார்.
இந்நிலையில், பவா செல்லத்துரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் வாயிலாக அங்கு பல ஆக்கப்பூர்வ கருத்துகள் பேசப்பட வழி வகுக்கும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.







