வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்
நெல்லை மாவட்டம், நாங்குநேரி களக்காடு அருகே வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். எனவே கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும், நாசம் செய்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு வாழும் வனவிலங்குகள் அடிக்கடி மலை அடிவார கிராமங்களில் புகுந்து விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
சமீப காலமாக காட்டுப்பன்றி, கடமான், கரடிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பாலம் பத்துகாட்டில் உள்ள வாழைத்தோட்டங்களுக்குள் இரவில் கரடி சுற்றித் திரிந்து 150க்கும் மேற்பட்ட ஏத்தன் ரக வாழைகளைச் சாய்த்து சேதப்படுத்தி உள்ளது.
இதனால், விவசாயிகளுக்கு ரூபாய் 30,000 இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தங்களது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆகையால், கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் வனவிலங்குகள் நாசம் செய்தப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
–கே.ரூபி







