“எட்டப்பன்களாக அல்ல கட்டபொம்மன்களாக” – ராகுல்காந்திக்கு, மு.க.ஸ்டாலின் பதிலடி!

வரலாறு எங்களை ‘எட்டப்பன்களாக’ அல்ல, மாறாக ‘கட்டபொம்மன்களாக’ அடையாளம் காணும் என ராகுல்காந்தியின் பதிவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிடுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு, அவரையும் திமுகவையும் கேட்டுக்கொள்வதற்காக சென்னை செல்கிறோம். தொகுதிகளின் எண்ணிக்கையை 850-ஆக அதிகரிப்பது இந்தியாவில் ஜனநாயகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும். இது, இந்தியாவின் ஒட்டுமொத்த தேர்தல் வரைபடத்தையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எல்லையற்ற வாய்ப்பை வழங்கும்.

சகோதரர் ஸ்டாலின், தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக எப்போதுமே ஒரு பாறை போல உறுதியாக நின்றிருக்கிறார்; நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அரசியலமைப்பைப் பாதுகாப்பதிலும், மாநிலங்களின் உரிமைகளைக் காப்பதிலும் திமுக ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்கினை அங்கீகரித்த சகோதரர் ராகுல்காந்திக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், தமிழ்நாட்டின் நலன்களையும், தமிழ் மக்களின் நலன்களையுமே முதன்மையான முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இந்தக் கொள்கைப் பாதையில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். வரலாறு எங்களை ‘எட்டப்பன்களாக’ அல்ல, மாறாக ‘கட்டபொம்மன்களாக’ அடையாளம் காணும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.