கொரோனா 2 ஆம் அலை தீவிரம் காரணமாக, பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்ததால், ஊரடங்கு விதிமுறைகளும் தளர்த்தப்பட்டன. இதனால் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் உள்நாட்டிலேயே நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. 29 போட்டிகள் முடிந்த நிலையில், வீரர்கள் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், தேதி குறிப்பிடாமல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், எஞ்சிய போட்டிகளை எங்கு நடத்தலாம் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்று ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, மீதமுள்ள போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன







