பீகாரில் எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பில் வெளியான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படியே இந்தியா முழுவதும் இன்றளவும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. நாடு விடுதலைக்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 1980, 1990-களில் இடஒதுக்கீடு விவகாரம் முழு வீச்சாக உயிர்த்தெழுந்த போது இந்த கோரிக்கை தீவிரமடைந்தது.
இந்நிலையில், பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நடத்தியது. அண்மைகாலங்களில் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய முதல் மாநிலம் பீகார். ஆனால் இதற்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாதக, பாதகமான தீர்ப்புகள் வந்தன. இந்நிலையில் தற்போது பீகார் அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடி. இதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14% முற்படுத்தப்பட்டோர் 15.52% தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%. பழங்குடி இன மக்கள் 1.69%. இவ்வாறு பீகார் அரசு அறிவித்துள்ளது.
இதில் குறிப்பாக, முற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிராமணர் – 3.65% , ராஜ்புத் – 3.45%, காயஸ்த் – 0.60% மக்கள் உள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் யாதவ் – 14.26%, பனியா – 2.31%, குஷ்வாகா 4.21%, குர்மி 2.87%, பனியா 2.31% மக்கள் இருப்பதாக சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதில் முக்கியமாக 27% சதவீத இட ஒதுக்கீடு மட்டும் பெறும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் 64 % பேர் உள்ளனர். 10% சதவீத இட ஒதுக்கீடு பெறும் முற்படுத்தப்பட்ட மக்கள் 15.5 சதவீதம் பேர் மட்டுமே இருப்பது உள்ளிட்ட பல அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
இதே போன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இன மக்கள் பிரிவில் உள்ள அனைத்து சாதி வாரியாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்றும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.







