மணிப்பூரில் மக்களை சந்திக்க தடை – மீண்டும் இம்பால் திரும்பினார் ராகுல் காந்தி

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் இம்பால் திரும்பினார். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள்…

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் இம்பால் திரும்பினார்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டால் தங்களுக்கு சலுகைகள் பாதிக்கப்படும் என அவர்கள் கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. கடந்த 50 நாட்களாக அங்கு கலவரம் வெடித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு 350 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு இரு நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்ற அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு சென்றார். அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் தொடர்ந்து முன்னேறி செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் இம்பால் திரும்பினார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ராகுல்காந்தி செல்லும் வழித்தடத்தில் வன்முறை ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஏற்கனவே பிஷ்னுபூரில் உள்ள உட்லோ கிராமத்திற்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டதாகவும், வாகனங்கள் மீது சில கற்கள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழும் என்று நாங்கள் அஞ்சுகிறோம், எனவே முன்னெச்சரிக்கையாக, பதற்றத்தை தணிக்கும் வகையில், அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2 நாட்கள் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும், ராகுலின் பயணம் சந்தர்ப்பவாத அரசியல் என பாஜக ஏற்கனவே விமர்சித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.