’பசிச்சா எடுத்துக்கோங்க, பணம்லாம் வேண்டாம்’: ஊரடங்கில் அசத்தும் மனிதர்!

கொரோனா மொத்த உலகையும் சுத்தமாகக் குலைத்துப் போட்டிருக்கிறது. வசதியாக வாழ்ந்தவர்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அலை, ஏராளமானவர்களை அலையவிட்டிருக்கிறது ஆம்புலன்ஸிற்கும் மருத்துவமனைகளுக்கும்! இதற்கிடையே, முழு ஊரடங்கு காரணமாக, சென்னையில் உணவு கிடைக்காமல்…

கொரோனா மொத்த உலகையும் சுத்தமாகக் குலைத்துப் போட்டிருக்கிறது. வசதியாக வாழ்ந்தவர்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அலை, ஏராளமானவர்களை அலையவிட்டிருக்கிறது ஆம்புலன்ஸிற்கும் மருத்துவமனைகளுக்கும்!

இதற்கிடையே, முழு ஊரடங்கு காரணமாக, சென்னையில் உணவு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். இந்த நேரத்தில், சென்னை பாலவாக்கத்தில், ஈசிஆர் சாலையில் சென்றால் உங்களுக்கு காசே இல்லாமல் முட்டையுடன் கூடிய சத்தான உணவு கிடைத்துவிடும். அப்படி கொடுப்பவர் ஒன்றும் பெரிய தொழிலதிபர் அல்ல.

கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவரும், சென்னையில் காப்பீட்டு முகவராக இருப்பவருமான அசோக் மேஷாக்தான் அவர். இவர் தன் வீட்டிற்கு அருகே, தள்ளுவண்டி கடை வைத்திருப்பவரை அணுகி, அங்கே உணவை வைத்து இலவசமாகக் கொடுத்து வருகிறார்.

முட்டையுடன் கூடிய உணவை வழங்கும் அசோக், வாழைப்பழமும் கொடுத்து உதவுகிறார். இதைக் கேள்விபட்டு உணவுக்குத் தவிப்பவர்கள் அங்கு வந்துவிடுகிறார்கள். தினமும் இதுபோல் 50 பேருக்கு மேல் கொடுப்பதாகவும், முழு ஊரடங்கு காலம் முழுவதும் இலவசமாக உணவை வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார், அசோக் மேஷாக்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுயநலமாக வாழாமல் பொதுநலத்துடன் செயல்படும், இப்படிப்பட்ட மனித நேயம் மிக்கவர்களால் இந்த உலகம் இன்னும் துடிப்புடன் இயங்குகிறது என்கிறார்கள் அக்கம் பக்கத்தில் இருப்ப வர்கள்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.