தமிழ்நாட்டுக்கு சீனாவிலிருந்து 12 கன்டெய்னர்களில் ஆக்சிஜன் வரவுள்ளதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இரண்டு நாட்களில் சரியாகும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார்.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்வில் தலா 2000 ரூபாய் கொரானா நிவாரண நிதியை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 40 டன் ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் பல இடங்களில் ஆக்சிசன் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். சீனாவில் இருந்து 12 கண்டெய்னர்கள் மூலமாக ஆக்சிஜன் வர உள்ளதாக கூறிய அவர், தொழில் துறையும் சுகாதாரத் துறையும் இணைந்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் இன்னும் 2 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார்.







