போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கைதான மத்திய அமைச்சரின் மகன் ஆஷுஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் கடந்த 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்ஹிம்பூர் பகுதியிலும் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது திடீரென ஒரு கார் அதிரடியாக பாய்ந்து அங்கிருந்த போராட்டக்காரர்கள் மீது ஏறியது.
இந்த சம்பவத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த விவசாயிகள், பத்திரிகையாளர்கள் என பலர் காயமடைந்தனர். மேலும் 8 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து வீடியோ ஆதாரங்களின் பெயரில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ரா அதிரடியாக கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த லக்ஹிம்பூர் நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
தொடர்ந்து அவரின் வழக்கறிஞர் அவதேஸ் சிங், விபத்து சம்பந்தமாக 150 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை விசாரணை செய்து வந்த காவல்துறையினரிடம் கொடுத்ததுடன், இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றம் சாட்ட எந்த ஒரு சரியான ஆதாரமும் இல்லை என வாதிட்டார்.
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் துவங்கிவிட்ட சூழலில் மத்திய அமைச்சரின் மகன் மீதான இந்த கொலை வழக்கு வாக்களர்களிடையே அதிகம் கவனிக்கத்தக்கதாக இருந்து வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் உத்தரபிரதேச தேர்தலில் 4வது கட்டத்தில் லக்ஷ்மிப்பூர் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்யும் யோகி ஆதித்யநாத்தின் அரசு மிகவும் வெளிப்படையாக ஆட்சி செய்து வருகிறது. அஜய் மிஸ்ரா மகன் மீதான இந்த வழக்கில் அரசும், காவல்துறையினரும் வெளிப்படையாகவே விசாரித்து வருகின்றனர்” என்று பேசினார்.
நாடுமுழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்புகளையும், எதிர்ப்புகளையும் பெற்றுவந்த இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு இன்று ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தேர்தல் நடந்து வரும் சூழலில் இந்த வழக்கில் மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








