கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணைகளில் உள்ள வாத்துக்கள் திடீரென செத்து மடிந்துள்ளன.இதனையடுத்து அம்மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் அவற்றின் ரத்த மாதிரியை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வாத்துக்கள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் நோய் தொற்று காரணம் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 5- கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதனால் நாமக்கலில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோழிப்பண்ணைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பண்ணைகளுக்கு உள்ளே வரும் வாகனங்களுக்கும் வெளியே செல்லும் வாகனங்களுக்கும் நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகிறது.
இது குறித்து பண்னையாளர்கள் கூறுகையில், இது வழக்கமான ஒன்றுதான் என்றும், கோழிகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது எனவும் கூறினர். மேலும் கோழிப்பண்ணைகளில் எப்போதுமே உயிர் பாதுகாப்பு முறை (Bio security system) தீவிரமாக கடைபிடிக்க வருவதாகும், பறவைக் காய்ச்சல் நோய் தொற்று இங்கே பரவ வாய்ப்பில்லை எனவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து தினசரி சுமார் ஒரு கோடி முட்டைகள் மற்றும் அதிகளவில் இறைச்சிக் கோழிகளும் கேரள மாநிலத்திற்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முட்டை மற்றும் கோழி இறைச்சி விற்பனை சரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.