சென்னை மனநல காப்பகத்தில் நடந்த காதல் திருமண விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன் பணி ஆணையை கல்யாண பரிசாக வழங்கினார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மகேந்திரன் மற்றும் தீபா தற்போது குணமடைந்து அங்கேயே பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்களது திருமணம் மருத்துவமனை அருகில் உள்ள கோவிலில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துக்கள் அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டார். தொடர்ந்து, மணமக்களை வாழ்த்தி சீர் வரிசைகளை வழங்கிய பின் மேடையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசினார். அப்போது, நரிக்குறவர் என்று சொல்வது தவறு. கலைஞர் அவர்களை நெறிக்குறவர் நெறி தவறாதவர்கள் என்றார். அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டது தான் இதுவரை நான் கலந்து கொண்ட பல திருமணங்களில் மறக்க முடியாதது. அதற்கு அடுத்ததாக இந்த திருமணத்தை என்னால் மறக்க முடியாது. இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றார்.
இவர்கள் திருமணம் குறித்து கேள்விப்பட்டதுடன் அவர்கள் முழுவதும் குணமடைந்து உள்ளார்களா, உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனரா என்று கேட்டு கொண்டேன். அனைத்து சட்ட விதிகளும் இந்த திருமணத்தில் பின்பற்றப்பட்டு உள்ளது. நான் இந்த திருமணத்தில் அழையா விருந்தாளியாக வந்துள்ளேன். பட்ஜெட்டில் 40 கோடி இந்த மருத்துவமனையை சீரமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு காலியாக உள்ள இடங்களில் எந்த பயிர்களை எல்லாம் விளைவிக்க முடியுமோ அதை எல்லாம் பயிரிட்டு வருகின்றனர். இப்போது கூட நெல் பயிரிட்டு உள்ளனர். இதன் மூலம் இந்த வளாகத்திற்கு வெளியில் உள்ளவர்களுக்கும் நெல் அளிக்க முடியும் என்றார்.
மேலும், நிரந்தர வருமானம் இருந்தால் அவர்கள் வாழ்வு இன்னும் சிறக்கும் என்று சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார். ஆனால் அவர்கள் வெளியில் சென்று வேலை செய்வதை விட இங்கு இருந்து இங்கு உள்ளவர்களுக்கு சேவை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இங்கேயே வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்த வேலை வாய்ப்பு ஆணையை மேடையில் கல்யாண பரிசாக அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்.







