மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்தது. 28 காளைகளை அடக்கிய மதுரை ஜெய்ஹிந்த்புரம் விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி நடப்பாண்டில் மதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கியது. அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஹித் சிம்கா, மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர் உள்ளிட்டோர் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாடு பிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் இணைந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். போட்டி தொடங்கியதும் சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டினர். மொத்தம் 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
இதில் 28 காளைகளை அடக்கி ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் முதலிடம் பிடித்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கும் ரூ.7 லட்சம் மதிப்பிலான நிசான் மேக்னைட் கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கி இரண்டவது இடம் பிடித்த மாடுபிடி வீரரான அவனியாபுரம் கார்த்திக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.13 காளைகளை அடக்கி மூன்றாவது இடம் பிடித்த மாடுபிடி வீரரான விளாங்குடி பாலாஜிக்கு பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது.
அவனியாபுரம் போட்டியில் காளையை அடக்கிய மற்ற வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படம் பொறிக்கப்பட்ட தங்க காசு வழங்கப்பட்டது. இதேபோல் உதய சூரியன் சின்னம் உள்ளிட்டவை பொறிக்கப்பட்ட வெள்ளிக் காசுகளும் பரிசளிக்கப்பட்டன. மேலும் சைக்கிள், பீரோ, கட்டில், உள்பட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன.