ஸ்ரீவைகுண்டம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய, கழுத்தளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் கிராம மக்கள் தூக்கிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ள மழவராயநத்தம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையனோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு 100 மீட்டர் அகலமுள்ள வாய்க்காலை தாண்டிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வருடத்தில் 8 மாதங்கள் இந்த வாய்க்காலில் கழுத்தளவிற்கு தண்ணீர் நிரம்பி காணப்படும். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இக்கிராம மக்கள், கழுத்தளவு நீர் ஓடும் வாய்க்காலை ஆபத்தான முறையில் கடந்து சென்றே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் தவித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அரசு, இந்த வாய்க்காலை கடக்க பாலம் அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.