கொடைக்கானல் – பழனி மலைப்பாதையில் கூம்பூர் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகளின் காரைக் காட்டு யானை வழிமறித்ததால், வெல்லபாரை மற்றும் கூம்பூர் சாலையில் வரும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் திலீப் அறிவுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக பேத்துப்பாறை, அஞ்சுவீடு, வெல்லாப்பாறை, கூம்பூர் பகுதிகளில் காட்டுயானை தொடர்ந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று காலை கொடைக்கானல் – பழனி மலைப்பாதையில் கூம்பூர் பகுதியில் திடீரென காட்டுயானை சுற்றுலாப் பயணிகளின் காரை வழிமறித்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறிது நேரம் சாலையில் நின்ற யானை பிறகு குடியிருப்புக்குள் சென்றதை அடுத்து வாகனங்கள் அங்கிருந்து சென்றுள்ளது.
தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் யானை இருக்கும் பகுதிக்குச் சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வெல்லபாரை மற்றும் கூம்பூர் சாலையில் வரும் சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் திலீப் அறிவுறுத்தியுள்ளார்.








