வடமாநில தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேரரை வெரைட்டிஹால் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை இடையர் வீதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளி கௌதம் சியாமல் கட்டுவா என்பவர் தனது நண்பர்கள் தன்மாய் ஜனா, ஜெகத் ஆகியோருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக நடத்து வந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ் ஆகியோரும், கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோரும் நடந்து வந்துள்ளனர்.
அப்போது, கௌதம் சியாமல் கட்டுவா மற்றும் அவருடன் வந்த தன்மாய் ஜனா ஆகியோரை
வழிவிடாமல் நடந்து சென்றதாகக் கூறி சூரிய பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த நபர்கள் தாக்கியுள்ளனர். மேலும், பானிபூரி கடையில் இருந்த மோனோ, ஷேக சவான் என்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இரு புலம் பெயர் தொழிலாளர்களையும் சூரியபிரகாஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
இதையும் படிக்க: 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ’ரி யூனியன்’ – சந்தித்த காதலர்கள் தலைமறைவு!
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் மேற்குவங்க மாநில தொழிலாளர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து கௌதம் சியாமல் கட்டுவா வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், இந்து முன்னணியை சேர்ந்த சூரிய பிரகாஷ் ,பிரகாஷ் கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ்,வேல்முருகன் ஆகிய 4 பேரையும் கைது செய்த வெரைட்டிஹால் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ம.பவித்ரா








