டெல்லி ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கு எதிராக ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழ்நாட்டு மாணவர்கள் 13 பேர் உட்பட ஏராளமான மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் உருவப்படங்களையும் ஏபிவிபி அமைப்பினர் சேதப்படுத்தினர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள் : சிவசேனா விவகாரம் – உத்தவ் தாக்கரேவின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
அக்கடிதத்தில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 19ம் தேதி ஜேஎன்யுவில் உள்ள மாணவர் சங்க அலுவலகத்தில் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டதாகவும், அதனை ஏபிவிபி அமைப்பினர் சீர்குலைத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் உருவப்படங்களை சேதப்படுத்திய ஏபிவிபி அமைப்பினர், ஆம்புலன்சில் இருந்த தமிழ்நாடு மாணவர் தமிழ் நாசரை தாக்கியதால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஏபிவிபியால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த வன்முறை சம்பவத்தை டெல்லி போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றும், ஜனநாயகக் குரல்களை நசுக்க, மாணவர்களுக்கு எதிராக ஏபிவிபி அமைப்பினர் வன்முறையில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே ஜேஎன்யு போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில், ஏபிவிபியால் மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.








