கேரளாவில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தனது கல்லீரலை 17 வயது சிறுமி தானம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ் (48). இவர் கணினி மையம் நடத்தி வருகிறார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தந்தையின் உடல்நிலை, குடும்பத்தின் வறுமை நிலை லட்சக்கணக்கில் செலவு போன்றவற்றை அறிந்து பரிதவித்த பிரதீஷின் மகள் (தேவநந்தா ) நந்து (17), தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முன்வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: ஓய்வு, உறக்கமின்றி வேலை பார்ப்பவரா நீங்கள்!… இதோ உங்களுக்கு நல்ல செய்தி….!
சட்டவிதிகளின்படி சிறார் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியாது. இதனால் உயர்நீதிமன்றத்தில் நந்து மனு தாக்கல் செய்து சிறப்பு அனுமதியும் பெற்றார். அதன் பிறகு நந்துவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடித்த நந்து தனது உணவுப் பழக்கத்தை முழுமையாக மாற்றினார்.அருகில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு தினமும் சென்று மிகக் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்தார். இதன் பலனாக ஒரு மாதத்துக்குள் அவரது கல்லீரலில் படிந்திருந்த கொழுப்பு கரைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 9ம் தேதி சிறுமி நந்துவின் கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து அவரது தந்தை பிரதீஷுக்கு மருத்துவர்கள் பொருத்தினர். அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு தந்தையும் மகளும் உடல் நலம் தேறி வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுமி நந்து கல்லீரலை தானமாக வழங்கியதால் பாதிப்பு ஏற்படாது. அவர் தானமாக வழங்கிய கல்லீரல் அவரது தந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அவரது உடலில் கல்லீரல் வளர்ந்துவிடும் என்றும் தெரிவித்தனர்.
அதுபோல வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வையும் எதிர்கொள்ள தயாராகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.