பழிக்கு பழிவாங்கவே பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 6ம் தேதி நள்ளிரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தொலை பேசி வாயிலாக புகார் ஒன்று வந்ததுள்ளது. தன்னை கால் டாக்சி ஓட்டுநர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், மதுரவாயில் சுங்கச்சாவடி அருகே, தன்னை தாக்கிவிட்டு, கால் டாக்சியில் வந்த பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் காரோடு கடத்திச் சென்றதாக கூறியிருக்கிறார்.
இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று கார் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடத்தப்பட்ட காரின் பதிவு எண்ணைக் கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரித்தனர். சிறிது தூரத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத, விளையாட்டு மைதானத்தில், கடத்தப்பட்ட கார் நின்று கொண்டிருப்பதை போலீசார் பார்த்துள்ளனர். காரின் அருகே சென்று பார்த்தபோது, அருகே பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டு, போலீசர் அங்கு சென்றனர்.
போலீசார் வருவதைப் பார்த்த கும்லைச் சேர்ந்த 5 பேர் தப்பி ஓட, கஞ்சா போதையில், ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். காரில் பயணித்த பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு ரத்த காயங்களுடன் இருந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த அந்த பெண், கணவருடன், மதுரவாயில் புறநகர் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே 24 மணிநேரம் இயங்கும் டீ கடை நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று, குழந்தைகளை கணவருடன் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். சிறுது நேரத்தில் டீக்கடையில் வியாபாரம் செய்து விட்டு, கால் டாக்சியில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது காரை வழிமறித்த மர்ம கும்பல், கார் ஓட்டுநரை தாக்கி விட்டு, கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி காரோடு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், 5 பேர் சேர்ந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அணிந்திருந்த 15 சவரன் நகைகளை பறித்துச் சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
கஞ்சா போதையில் சிக்கிய இளைஞரை, போலீசார் மறுநாள் காலையில் போதை தெளிந்ததும் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அளித்த தகவலின் படி, தப்பி ஓடிய 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சாலையோரம் அமைந்துள்ள நியாயவிலை கடையின் மாடியில் நண்பர்களோடு சேர்ந்து, மது, கஞ்சா புகைப்பது இவர்களது வழக்கம். சம்பவ நாள் அன்றும் வழக்கம் போல போதையில் இருந்துள்ளனர். அப்போது சாலையேரம் வந்த கார், நின்றுள்ளது. நீண்ட நேரம் ஆகியும், கார் அங்கிருந்த நகராததால் காரின் அருகே சென்று பார்த்ததபோது, காருக்குள் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தனர் என்று கூறியவர்கள், காரின் கதவை தட்டி, தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். கதவை திறந்த பெண் கடிந்துக்கொண்டதோடு கார் ஓட்டுநரோடு சேர்ந்து, தங்களை தாக்கியதாக பிடிபட்டவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்து, கார் ஓட்டுநரை தாக்கிவிட்டு, பெண்ணை காரோடு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.









