சேலத்தில் மாமூல் கேட்டு தேநீர் கடை ஊழியரை இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் தாதகாப்பட்டி பில்லுகடை பேருந்து நிறுத்தம் அருகே தேநீர் கடை உள்ளது. இதில் டீ மாஸ்டராக அப்துல்சுப்பு என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடைக்கு சென்ற சிலர் அப்துல் சுப்புவிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அவர் இல்லை என்று தெரிவித்துள்ளதால் அங்கிருந்த நான்கு சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
மேலும் சிகரெட் பற்றவைத்து அந்த புகையை அப்துல் மீது ஊதியதோடு, அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்து, அவரை தாக்கினர். அதுமட்டும் இல்லாமல் கடையில் இருந்த பிஸ்கட் வைத்திருந்த கண்ணாடி ஜாடிகளை எடுத்து உடைத்து அனைத்து பொருட்களையும் சூறையாடினர். இது குறித்து அன்னதானப்பட்டி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அப்துல் சுப்பு மீது புகையூதுவதும், அவரை அடிப்பதும், பொருட்களை உடைப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் அப்துல் சுப்புவை தாக்கியதாக. தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், சதீஷ்குமார், அப்துல் ஹரீன் மற்றும் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களுடன் வந்த ரஞ்சித் என்ற பிரபல ரவுடிதான், டீ மாஸ்டரை அடித்தது தெரியவந்தது. இவர் கிச்சிப்பாளையம் பிரபல ரவுடி செல்லதுரை கொலை வழக்கில் கைதானவர். மேலும் தலைமறைவான இவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்









