நாட்டின் 14வது குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
13வது குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த வெங்கைய்யா நாயுடு பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடையவிருந்த நிலையில் புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 6ந்தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் களம் இறங்கினார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிங்களில் ஆளுநராக இருந்தவருமான மார்க்கரெட் ஆல்வா போட்டியிட்டார்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் வாக்களித்த இந்த தேர்தலில், சுமார் 73 சதவீத வாக்குகளை பெற்று ஜெகதீப் தன்கர் அமோக வெற்றிபெற்றார். இந்நிலையில் நாட்டின் 13வது குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து வெங்கைய்யா நாயுடு நேற்று ஓய்வு பெற்ற நிலையில் 14வது குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்றார்.
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜெகதீப் தன்கருக்கு குடியரசு தலைர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள வெங்கைய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







